நவராத்திரி தினத்தில் கண்டிப்பாக செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்
நவராத்திரி காலத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என சில முறைகள் சொல்லப்பட்டுள்ளது. நவராத்திரி விரதம் இருந்து, வழிபாடுகளில் ஈடுபடா விட்டாலும், சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தவிர்க்க வேண்டும்.
அப்படி நவராத்திரி காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
செய்ய வேண்டிய விடயங்கள்
கொலு வைத்தாலும், வைக்கா விட்டாலும் தினமும் காலை மற்றும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி, அம்பிகையை வழிபட வேண்டும். அம்பிகையை போற்றும் மந்திரங்களை படிப்பதும், கேட்பதும் சிறப்பு. தினமும் பூக்கள் அணிவித்து வழழிபட வேண்டும்.
முடிந்தவர்கள் நைவேத்தியம் படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் எளிமையாக பழங்கள், பால், கற்கண்டு மட்டும் படைத்தும் வழிபடலாம்.
முடியும் என்பவர்கள் ஒருவேளை மட்டுமாவது தினமும் உபவாசமாக இருந்து, அம்பிகையை வழிபட வேண்டும். முடியாதவர்கள் சைவமாக சாப்பிட்டு, விரதத்தை கடைபிடிக்கலாம். விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சுய ஒழுக்கத்தை கடைபிடித்து, ஒன்பது நாட்களும் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்த வரை நவராத்திரி காலத்தில் தானங்கள் வழங்கலாம். இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம். உடை, உணவு, பணம் ஆகியவற்றை கொடுத்து உதவலாம். கருணை, அன்பு என்பது அம்பிகையின் குணமாகும்.
இதை எவர் ஒருவர் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு அம்பிகையின் அருள் முழுவதுமாக கிடைக்கும். தானாக அவர்களை தேடி அதிர்ஷ்டமும், நன்மைகளும் வரும்.
தவிர்க்க வேண்டிய விடயங்கள்
அசைவம் சாப்பிடுவது, மது அருந்துவது, போதை வஸ்துக்களை பயன்படுத்துவது, கோபப்படுவது, மற்றவர்கள் மீது பொறாமை கொள்வது, பொய் சொல்வது, திருடுவது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும். அதனால் தெய்வ அருள் நமக்கு கிடைப்பதற்கு பதில், அம்பிகை நம் மீது கோபம் கொள்வாள்.
புறம் பேசுவது, மற்றவர்களை வார்த்தையாலும், செயலாலும் காயப்படுத்துவது, மனதை கெடுக்கும் விஷயங்களை பார்ப்பது, அவற்றில் கவனம் செலுத்துவது ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. மற்றவர்களின் செயல்களை கிண்டல் செய்வது, குறிப்பாக வழிபாடுகளை விமர்சிப்பது, கிண்டல் செய்வது போன்ற செயல்கள் எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து, நமக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும்.
மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தரும் விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். மற்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். மனதை அமைதியும், தூய்மையும் அடைய செய்யும் ஆன்மிக நூல்களை வாசிப்பது நல்லது.
வயதில் மூத்தவர்கள், தெய்வங்கள் ஆகியோரை அவமதிப்பது போல் பேசுவது, நடந்து கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதே போல் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்வது, ஆசிரியர்களை கிண்டல் செய்வது, தன்மையான முறையில் நடந்து கொள்ளாமல் இருப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
அனைவரையும் மரியாதையுடனும், கருணையுடனும் நடத்த வேண்டும்.