இலங்கையில் இயற்கையின் கோரதாண்டவம்; ஜனாதிபதியிடமிருந்து பறந்த உத்தரவு!
நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு உள்ளான மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை
தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, அந்தந்தப் பகுதிகளில் நிலவும் அபாய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை இனங்கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு வரவு-செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தடையாக உள்ளதால், இது குறித்து இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேலும் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டது.
இங்கு முக்கியமாக மக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதோடு , உயர்தரப் பரீட்சையை நடத்துதல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் அனர்த்தம் காரணமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன், சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நட்டஈடு வழங்கும் முறைமை குறித்தும் கவனம் செலுத்தினார்.
அத்துடன், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்தும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பெருந்தெருக்கள் கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31 அனர்த்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.