யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கும்பல் வழங்கிய பல அதிர்ச்சி வாக்குமூலம்!
யாழ்ப்பாண நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்கள், இளவயதினரை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த 6 பேர் கடந்த 3ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியகியுள்ளன.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வரும் குறிப்பிட்ட சில அதி சொகுசு பேருந்துகளில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் இந்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குருநகரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாவாந்துறையை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டியில் திரிந்து வியாபாரம் செய்வது தெரிய வந்தது.
குறித்த சந்தேக நபரே இந்த குழுவின் பிரதான சூத்திரதாரி. அவரை கைது செய்ய முற்பட்ட போது, முச்சக்கர வண்டியை கைவிட்டு தப்பியோடிய முயன்ற நிலையில் பொலிஸார் அவரை விரட்டிபிடித்தனர்.
இதன்போது, 10 மாத்திரைகளை கொண்ட ஒரு அட்டையை 700 ரூபாவிற்கு கொழும்பில் கொள்வனவு செய்து, நாவாந்துறை நபருக்கு 2000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், குறித்த நபர் அதை 2700 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பல், அதை யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் 3500 ரூபாவிற்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து வரும் சில சொகுசு பேருந்துகளில் உதவியாளர்களாக பணியாற்றும் இளைஞர்கள், இந்த மாத்திரைகளை கொழும்பிலிருந்து கொண்டு வர உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.