கைதான தம்பியை காண பரிவாரங்களுடன் சென்ற நாமல் ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று(25) குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பார்ப்பதற்காக அவரது சகோதரரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு சிஐடி பிரிவிற்கு இன்று வருகை தந்தார். நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் பழிவாங்கலேயன்றி வேறு எதுவும் இல்லை
எங்களுக்கு விசாரணை என்று தெரிவித்திருந்தால் நாங்கள் விடுமுறை என்று கூட பாராமல் வருகை தந்திருப்போம், ஆனால் எமது வாகன எரிபொருளை சேமித்து அரச செலவில் எங்களை கூட்டிச் செல்லலாம் என பொலிஸார் நினைத்தார்களோ தெரியாது.
அத்துடன் வரலாற்றில் அதிக கொலை குற்ற செயல்கள் நடைபெற்ற மாதமாக இந்த மாதத்தை காணலாம். அரசியல் பழிவாங்கல்களுக்கு துணை போகாமல், காவல்துறையானது இந்த கால நேரத்தை இந்த குற்ற செயல்களை தடுப்பதற்கு பாவித்து இருந்தால் பாரிய குற்றங்களை தடுத்திருக்கலாம்.
தேங்காய் சம்பலோடு சாப்பாடு சாப்பிட்டது தான் நாங்கள் செய்த குற்றம். இது சந்தேகமின்றி அரசியல் பழிவாங்கலேயன்றி வேறு எதுவும் இல்லை என்றார்.
அதேவேளை, யோஷித ராஜபக்சவை பார்வையிட பெரமுனைவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சாணக்க மற்றும் அவருடன் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.