வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் வருடாந்த பெரும் திருவிழா; பக்தர்களுக்கு வேண்டுகோள்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் வருடாந்த பெரும் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் , தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுமாறும் புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணிந்து செல்லாமல், புனிதத்தைப் பேணுமாறும் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமியாரின் திருவிழாக் காலம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லூரானின் பெருந்திருவிழா தெய்வீகக் களை
நல்லூரானின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாம் ஆயத்தமாவோம் ஈழத்திருநாட்டின் ஈடு இணையற்ற பெருங்கோவிலாக விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி கோவில்.
இத்திருக்கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெறவுள்ளது. பல இலட்சம் மக்கள் நல்லூர் வீதியில் முருகனைக் காண ஒன்றுகூடப் போகிறார்கள்.
வடக்கில் உள்ள மக்கள் இந்த வாரமே தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்தி நல்லூரான் திருவிழாவிற்காக தங்கள் வசிப்பிடத்தையும் புனிதப்படுத்தத் தொடங்கியிருப்பார்கள்.
நல்லூர் சுற்றாடல் தெய்வீகக் களைகட்டத் தொடங்கிவிடும். தண்ணீர்ப்பந்தல்கள் அமைக்கும் வேலைகள் ஆரவாரமாக தொடங்கிவிடும். அழகன் முருகன் திருவீதியில் அரோகரா சத்தம் இருபத்தைந்து நாட்களும் ஓங்கி ஒலிக்கும்.
வீதியெல்லாம் புதிய மணல் பரப்பி அங்கப் பிரதிஷ்டை மற்றும் அடியடித்துக் கும்பிடும் அடியவர்க்கு வசதிகள் செய்வார்கள். தெய்வீகச் சூழலாக மாறும் நல்லூர்ச் சுற்றாடலின் சிறப்பு எழுத்தில் வடித்துவிடமுடியாது.
நல்லூர்க் கந்தன் ஆலயத்தை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக காத்துவரும் மாப்பாணர் பரம்பரைக்கு சைவ உலகம் என்றும் நன்றிக்கடன் பட்டது.
போரில் அழிந்த சைவத் தமிழர்களின் திருக்கோவிலை தமது சொந்த நிலத்தில் தமது குடும்பத்தின் முயற்சியால் உருவாக்கி கடந்த மூன்று நூற்றாண்டுகள் உன்னதமாக கட்டிக்காத்து வரும் மாப்பாணர் குடும்பத்தின் மகத்துவத்தை எல்லோரும் நன்கு அறிவர்
. திசைகள் தோறும் கோபுரங்கள் உள்வீதி முழுவதும் உவமை இல்லா அழகுக் காட்சிகள் உருவாக்கி உலகம் வியக்க வைக்கும் நல்லூரான் தனித்துவத்தை எவரும் குறைத்து மதித்து விடமுடியாது.
சர்வதேசமே வியந்து போற்றும் நல்லூர் கந்தனின் பெருமை
சர்வதேசமே நல்லூர்ச் சிறப்பை வியந்து போற்றுகிறது. அமெரிக்க ஹவாய் சைவ ஆதீனம் வெளியிட்டு வரும் நூலில் உலகம் முழுவதும் வாழும் சைவ மக்கள் சீரிய ஒழுங்கைப் பின்பற்றுவதற்கு நல்லூரை தரிசியுங்கள் என கூறியுள்ளார்கள். இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் “அப்பப்பா என்ன அதிசயம்? நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குள் கால் எடுத்து வைத்தவுடன் எம்மை மறந்து விடுகிறோம்.
ரம்மியமான இத்திருக்கோவில் சிறப்புப் பற்றி உலகமே வியக்கிறது” என உரைத்தமை அனைவரும் அறிவர். அன்பர்களே நல்லூர்ப் பெருந்திருவிழாக் காலங்களில் குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு செய்வதற்கு ஆயத்தமாகுங்கள்.
தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுங்கள். புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணியாதீர்கள். விசேட தேவையுடையவர்கள் வழிபாடு செய்ய வரும்போது தொண்டர்கள் உதவுங்கள்.
சுற்றுச்சூழலில் வசிப்பவர்கள் ஆன்மிக அலங்காரங்களை தாம் வசிக்கும் இடங்களில் ஏற்படுத்துங்கள். படம்பிடித்து முருகனை தேடுவதை விட பக்தியோடு அவனை அகத்தால் உள்வாங்குங்கள்.
வீதியில் சுவாமி புறப்பட்டால் வேடிக்கைக்கு இடமில்லை. வேலனிடம் விடிவு கேட்டுப் பிரார்த்திப்பதே எமக்கு வேலை என உணருங்கள்.
சஞ்சலமின்றி இறைவன் எமக்குத் தந்த இந்த இனிய நாட்களை ஆனந்தமாகக் கழிப்பதற்கு ஆயத்தமாகுங்கள். அலங்காரக் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்களாகிய நாம் எளிமையாக நின்று வணங்குவோம்.
எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வழிபாட்டு மரபை முன்னெடுத்துச் செல்வோம். எல்லோரும் நல்லூரான் பெருவிழாவைக் கண்ணாரக் காண்போம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.