மகர வாகனத்தில் அருட்காட்சி அளித்த நல்லூர் கந்தன் ; நாளை மஞ்சத் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை மாலை எட்டாம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, வேல் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராக மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
இதனையடுத்து, மூவரும் ஆலய வெளிவீதிகளில் உலா வந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வருடாந்த மகோற்சவத்தின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான எட்டாம் திருவிழாவைக் காண யாழ்ப்பாணம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மகர வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையின் தெய்வீகக் காட்சியை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் மகோற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக, நாளைய தினம் புதன்கிழமை 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த விசேட திருவிழாவிலும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



