வாகன இறக்குமதிக்கான வரி குறித்து நளிந்த ஜயதிஸ்ஸவின் முக்கிய அறிவிப்பு
பொருளாதாரத்தை படிப்படியாக நிலையானதாக்குவதன் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த நோக்கத்திலேயே தற்போது வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் தகவலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இறக்குமதி வரி வருவாயைப் பரிசீலனை செய்த பின்னரே வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
நான்கு ஆண்டுகளாக வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்த ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ளதால், பொருளாதாரம் படிப்படியாக முன்னேறிவரும் நிலையில், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அனுமதிக்க முடியாது.
வாகன இறக்குமதிக்கான வரிகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் படிப்படியாகத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.