நயினாதீவு குறிகாட்டுவானில் கடல் போராட்டம்
யாழ்ப்பாணம் நயினாதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இழுவைமடி படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக் கொள்ளை மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீவக கடற்தொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், கண்ணாடி இழை படகுகளில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டவாறு கடற்தொழிலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, கடல் வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதோடு, வடக்கு மற்றும் தீவகப் பகுதிகளைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் தொழில் உபகரணங்களை சேதப்படுத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நாளாந்த வருமானமும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

, இந்தப் பிரச்சினையில் கடற்றொழில் அமைச்சு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், தொடர்ச்சியாக இடம்பெறும் எல்லை மீறல்கள் மற்றும் இழுவைமடி படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“கடலுக்காக நீதி வேண்டும்; எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏராளமான கடற்தொழிலாளர்கள் இந்தக் கடல் போராட்டத்தில் பங்கேற்றனர்.