நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான சிவகங்கை கப்பல் இன்று காலை 7.55 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 12.55 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து, கப்பல் மீண்டும் பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
இந்த சேவையின் மூலம் இந்தியாவில் இருந்து 93 பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், 79 பயணிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பயணித்தனர்.
அசாதாரண காலநிலை காரணமாக சில வாரங்களுக்கு முன்பு கப்பல் சேதமடைந்திருந்ததால், இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இவ்விலையில் தேவையான திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிவகங்கை கப்பல் மீண்டும் பயணிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.