கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல்கள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று (18) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கின் பல பிரதேசங்களிலும் வெளிமாவட்டங்களில் சில இடங்களிலும் நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பரிமாறல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

நினைவேந்தல்
அந்த வகையில் இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்றை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (மே 18) கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக நிகழவுள்ள இந்த நினைவேந்தலில் பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர்.