கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு வீர வீராங்கனைகள்!
முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் விளையாட்டிலும் சாதனை புரிந்து, கல்வியிலும் சாதனை படைத்துள்ளார்கள்.
இந் நிலையில் இவர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தும் நிகழ்வு நேற்று முன்தினம் (05.10.2022) மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வீர வீராங்கனைகளை கௌரவித்தார்.
மாகாண, பல்கலைக்கழக, தேசிய மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கராத்தே, ஜுடோ, தைக்வொண்டோ, வூசோ போட்டிகளில் வெற்றி பெற்ற பதினோரு வீர வீராங்கனைகள் உயர்தரத்தில் தோற்றி பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியமை கல்வியிலும் விளையாட்டிலும் உச்ச சாதனையாக பார்க்கப்படுகின்றது.
இவர்கள் மருத்துவப்பிரிவு , தொழில்நுட்பபிரிவு, கலைப்பிரிவு, வர்த்தகபிரிவு, விளையாட்டு விஞ்ஞானபிரிவு முதலிய துறைகளுக்கு தெரிவாகி கல்வி கற்றதுடன், ஒருசிலர் தற்போதும் கல்விகற்றுவருகின்றர்.
இவர்களை கௌரவப் படுத்தும் இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திரு.க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) திரு. எஸ்.குணபாலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.லிங்கேஸ்வரகுமார், காணி பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. கு. முரளிதரன், மாவட்ட பொறியியலாளர் திரு.சி.கஜந்த், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயபவானி, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.ந.முகுந்தன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் திரு.இ.சகிதரசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.