முல்லைத்தீவு சிறுமி மரணம்; விசேட நிபுணர்கள் குழுவின் விசாரணை
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் விசாரணை இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.
சிறுமி உயிரிழந்தமை தொடர்பாக விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் அடங்கலாக 06 பேர் கொண்ட குழு, இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம்.உமாசங்கர் தெரிவித்தார்.

உரிய முறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவில்லை
குறித்த குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறினார்.
விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உணவு ஒவ்வாமைக் காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார்.
உரிய முறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமையாலேயே சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ள துடன், சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமைய, விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.