சவூதி அரேபியாவில் அனோஜனின் நிலை தொடர்பில் நாடாளுமன்றில் வெளியான தகவல்
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) நிலையியல் கட்டளை 27(2) கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய அவர், அனோஜன் சிறையில் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
அத்துடன், அனோஜனின் மேன்முறையீடு, சவூதி தரப்பின் மேல்முறையீடு, சட்டப் பிரதிநிதிகள் குழுவின் சவூதி விஜயம், ஜனாதிபதியின் அரச மன்னிப்பு கோரிக்கை மற்றும் அனோஜனை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெளிவான தகவல்களை வழங்குமாறும் அவர் கோரினார்.
அனோஜன் தொடர்பான விடயத்தில் எவரும் அரசியல் நோக்கத்துடன் செயற்படவில்லை எனத் தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம், அவரை எவ்வழியிலாவது பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அனோஜனின் உயிருக்குத் தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர் சிறைச்சாலையின் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதைச் சிறை அதிகாரிகள் தூதரகத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
சிறையிலிருந்த மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் முற்றியதே இந்த மோதலுக்குக் காரணம் என்றும், மருத்துவப் பரிசோதனைகளின்படி அவரது முகத்தில் மற்றைய கைதியின் நகக் கீறல்களும் லேசான காயங்களும் மட்டுமே காணப்படுவதாகவும், தாக்குதலில் எந்தவிதமான ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறைச்சாலை வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி சட்டக் கட்டமைப்புக்கு அமைவாக, சிவராசா அனோஜனுக்கு தேவையான சட்ட நிவாரணங்களைப் பெற்றுத்தர அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.