கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கொன்ற தாய்
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் சித்திபேட் மாவட்டத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது தாயும் அவருடன் தொடர்புடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீகுல் பகுதியைச் சேர்ந்த சுவாமி மற்றும் ஜோதி தம்பதியரின் 3 வயது மகன் ஹரிகிருஷ்ணா கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், ஆரம்பத்தில் அது விபத்து என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்ற நாளில், சிறுவன் வீட்டில் இருந்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் மயக்கமடைந்த நிலையில் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குழந்தை கட்டிலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், சில நாட்களுக்குப் பின்னர் வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதை அடுத்து குழந்தையின் தந்தை சந்தேகமடைந்து, அருகிலிருந்த கண்காணிப்பு கமெரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.
அந்தப் பதிவுகளில் சம்பவம் நடந்த நாளில் வெளிநபர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தமை பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், குழந்தையின் தாயிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
இந்த வழக்கில் குழந்தையின் தாயும் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.