யாழில் தாய் - மகனை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்!
யாழில் தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் யாழ்.நாவற்குழியில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழையில் வீடொன்றில் கடந்த 2020ஆம் ஆண்டு 32 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தேடப்பட்டவர்களையே பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த சனிக்கிழ்மை நாவற்குழியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாயை - மகனை கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கி துன்புறுத்தி நகைகளைத் தருமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதேவேளை வீட்டில் இருந்து பெறுமதியான தொலைபேசியினையும் 5 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருடர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் யாழ்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்றனர்.
சாவகச்சேரி பொலிஸ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சந்தேக நபர்கள் குறித்து யாழ்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
குறித்த இரு சந்தேக நபர்களை யாழ்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த நிலையில் அவர்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினர்.
இதன்போது யாழ்.தெல்லிப்பழையிலுள்ள வீடு ஒன்றில் 2020ஆம் ஆண்டு 32 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் இன்று கைது செய்யப்பட்ட இருவரும் முதன்மை சந்தேக நபர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.