உலகில் ஓரங்கட்டப்பட்ட நாடாக மாறி வருகிறோம்; பிரதமர் தெரிவிப்பு
சில தவறான செயல்களால் உலகில் ஓரங்கட்டப்பட்ட நாடாக இலங்கை மாறிவருகின்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் நட்பு நாடுகளால் எமக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க திட்டங்களை இடைநிறுத்துவது குறித்து விசாரணை நடத்துமாறு பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவை நான் வலியுறுத்துகிறேன் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (7) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த வேளையில் நமது வெளிநாட்டு உறவுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். சர்வதேச ஆதரவை அதிகரிக்க வேண்டும். சில தவறான செயல்களால் உலகில் ஓரங்கட்டப்பட்ட நாடாக மாறி வருகிறோம். அந்த நிலையை மாற்றுவது எளிதல்ல. ஆனால் நாம் அதை எப்படியாவது செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக தற்போது வெளிநாட்டு தூதுவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக தெரிவித்த பிரதமர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியோருடன் தொலைபேசி உரையாடல்களை தான் மேற்கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.