இலங்கையில் ஒரே வாரத்தில் சடுதியாக உயர்ந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா பரவல் மூன்றாம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் அதனை புத்தாண்டு கொத்தணி என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் விபரங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் இவ்வாறு 'புத்தாண்டு கொத்தணி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் மே மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அடுத்த இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட சகல மங்கள நிகழ்வுகளுக்கும் தடை விதித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாத்தளை , குருணாகல் , மொனராகலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அதற்கமைய நாட்டில் இன்று மாலை வரை 8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருவாரத்தில் 7000 தொற்றாளர்கள்
இம்மாதம் 23 ஆம் திகதி முதல் கொவிட் பரவல் 3 ஆம் அலை ஆரம்பித்தது. அன்றிலிருந்து நேற்று வரை நாடளாவிய ரீதியில் 7764 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி 969 , 24 ஆம் திகதி 895, 25 ஆம் திகதி 793 , 26 ஆம் திகதி 997 , 27 ஆம் திகதி 1111 , 28 ஆம் திகதி 1466 மற்றும் 29 ஆம் திகதி 1533 என கடந்த ஒரு வாரத்தில் இவ்வாறு 7000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.