இலங்கை சுகாதாரத் துறையில் நெருக்கடி ; 2500க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை
இலங்கையின் சுகாதாரத் துறையில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அதன் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக 2,500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வெளியேறுவது மருத்துவமனைகளை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்றும், சுகாதார அமைச்சின் "குறுகிய பார்வை மற்றும் திறமையற்ற கொள்கைகள்" நிலைமையை மோசமாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நீதி, நியாயமான சிகிச்சை மற்றும் தொழில்முறை பாதுகாப்பு மூலம் மருத்துவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான பலமுறை முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், அமைச்சு ஒரு நிரந்தர பொறிமுறையை செயல்படுத்தத் தவறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க சுகாதார அமைப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட சூழலை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துவதாக மருத்துவர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார்.