தென்னிலங்கையை உலுக்கிய தம்பதிகள் கொலையில் மேலதிக தகவல் ; பெண்ணின் உடலில் தோட்டா
நேற்றையதினம் (7) அதிகாலை அம்பாந்தோட்டை ஹங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர் 28 வயதான பசிந்து ஹெஷான் அல்லது போ பசிந்து என்பவரும் பெண் 26 வயதான திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
பெண்ணின் உடலில் தோட்டா
உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இக் கொலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயரிழந்தவர், 2024 மார்ச் மாதத்தில் கஹந்தமோதரவில் படகு ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நால்வர் கைது
கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும், கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேக நபர் 35 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 12 ரக உள்நாட்டுத் துப்பாக்கி, 02 கத்திகள், 12 ரக வெடிமருந்துகள் மற்றும் 12 ரக வெற்று வெடிமருந்துகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.