முல்லைத்தீவு இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூட அறிவிப்பு
முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கேப்பாபுலவில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் இராணுவத்தால் நடத்தப்படும் குளிரூட்டப்பட்ட சிகையலங்கார நிலையமான ‘ப்ளூ பெல்ஸ் சலூன்’ ஐ மூடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபைின் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் கூறுகிறார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மக்களின் வாழ்வியலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் இதுபோன்ற செயல்களில் இராணுவம் ஈடுபடுவது மிகவும் மோசமான சம்பவம் ஆகும்
இராணுவத்தினரால் நடத்தப்படும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு நாங்கள் அறிவித்திருக்கின்றோம். இராணுவம் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எங்களுடைய மக்களின் வாழ்வியலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கின்ற இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதானதுமிகமோசமான ஒரு சம்பவம்.”
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பிரதிநிதியான சின்னராசா லோகேஸ்வரன், பிரதேச சபையால் வெளியிடப்பட்ட அறிவிப்பை நிறைவேற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இராணுவத்தின் வேலையேத் தவிர மக்களின் தொழிலை தாங்கள் செய்வதல்ல. இதனால் அந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இராணுவத்தின் இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதனால்தான் நாங்கள் இராணுவத்தை தமிழ் தாயகப் பிரதேசத்தில் இருந்து அகற்றுமாறு கோருகின்றோம்.
அறிவித்தலின் பின்னர் இது மூடப்படும் என நம்புகின்றோம். அவ்வாறு மூடப்படாவிட்டால் அதற்கெதிராக நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை போர் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, வணிகங்களில் ஈடுபடுவதாக பாதுகாப்புப் படையினர் மீது பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.