வீதியோரச் சிறுவர்களுக்கும் மாதாந்த உதவித்தொகை; மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் நிறுவனப் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக ரூ.5,000ஐ வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ‘அர்த்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுகள் ஜூலை 2025 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான ‘அர்த்தம்’ வேலைத்திட்டத்திற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 1,000 மில்லியன் ரூபாவினை பிள்ளைகளின் உயரிய நலனுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில், 2025 ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கொடுப்பனவுகளை வழங்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, ‘அர்த்தம்’ வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுகளுக்கான உரித்து ஆரம்பமாகும் திகதியை 2025.01.01 எனக் கருதி, குறித்த திகதியிலிருந்து நிலுவையில் உள்ள சலுகைகளை அவர்களின் கணக்குகளில் வரவு வைக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.