கூண்டுகளில் அடைக்கப்பட்டு பட்டினி போடப்பட்ட குரங்குகள்; கடும் எதிர்ப்பு
கண்டி தும்பனை பிரதேசத்தில், கூண்டுகளில் அடைக்கப்பட்டு, பட்டினி போடப்பட்டு, சூரிய ஒளி மற்றும் அதிக மழைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பாரிய எண்ணிக்கையிலான குரங்குகள் தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியை சுட்டிக்காட்டி, விலங்குகள் நலன்புரி அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

மரணத்தின் விளிம்பில் உள்ள பல குரங்குகள்
பல நாட்களாக உணவு இல்லாமல், இறந்துபோன மற்றும் மரணத்தின் விளிம்பில் உள்ள பல குரங்குகள் அந்த கூண்டுகளில் இருப்பதாகவும் குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற செயலை உடனடியாக நிறுத்தக் கோரி, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கு அந்த அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கொடூரமான செயல் மீண்டும் தும்பனையில் நிகழ்ந்திருப்பது குறித்துத் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலன்புரி கூட்டணி கூறியுள்ளது.
மேலும் பிடிக்கப்பட்ட குரங்குகளை உடனடியாக விடுவிக்கவும், பிடிபடும் குரங்குகளை எந்தவித தாமதமும் இன்றி விடுவிக்க மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளுக்கும் உத்தரவு வழங்குமாறும் இலங்கை விலங்குகள் நலன்புரி கூட்டணி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.