Bunker இல் முஜ்தபா காமேனி; முக்கிய தகவலை கூறிய நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் முஜ்தபா காமேனியின் நிலை குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் முஜ்தபாவின் தந்தை அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு, முஜ்தபா காமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’60 மினிட்ஸ்’ (60 Minutes) நேர்காணலில் பேசிய நெதன்யாகு,

முஜ்தபா காமேனி பதுங்கு குழியில் உயிருடன் இருப்பதாகவே கருதுகிறேன்
முஜ்தபா காமேனி உயிருடன் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால் அவர் தற்போது ஏதோ ஒரு ரகசிய பதுங்கு குழியில் (Bunker) அல்லது மறைவிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
அவர் தனது அதிகாரத்தைச் செலுத்த முயன்றாலும், அவரது தந்தைக்கு இருந்த செல்வாக்கு அவரிடம் இல்லை என்று நெதன்யாகு தெரிவித்தார். அதோடு ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் குறித்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மையையும் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் தனது ‘ஹார்முஸ் ஜலசந்தி கார்டை இவ்வளவு வலிமையாகப் பயன்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறினார்.
நானோ அல்லது அமெரிக்காவோ அல்லது ஈரானியர்களோ கூட இதை இவ்வளவு துல்லியமாகக் கணிக்கவில்லை. ஈரானின் ஏவுகணை மற்றும் பிற ராணுவ பலம் முடக்கப்பட்ட பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதே அவர்களின் மிகச்சிறந்த ஆயுதமாக மாறியுள்ளது என நெதன்யாகு தெரிவித்தார்.
மறுபுறம், ஈரான் அரசு ஊடகங்கள் முஜ்தபா காமேனி “முழு ஆரோக்கியத்துடன்” இருப்பதாகத் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 28 தாக்குதலில் அவரது முழங்கால் மற்றும் முதுகில் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் அதிலிருந்து குணமடைந்து வருவதாகவும் ஈரான் தரப்பு கூறுகிறது.
எதிரிகள் அவரது ஆடியோ அல்லது வீடியோ ஆதாரங்களைத் தேடி வருவதால், பாதுகாப்பு கருதி அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சரியான நேரத்தில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அவர் பதவியேற்றது முதல் இதுவரை எழுத்துப்பூர்வமான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருவது சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், ஈரானின் யுரேனியம் கையிருப்பு முழுமையாக அகற்றப்படும் வரை இஸ்ரேல் ஓயாது என்றும் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக இருப்பதாகவும், ஆனால் எதிர்காலத்தில் அமெரிக்க ராணுவ உதவியின்றிச் செயல்படும் அளவிற்கு இஸ்ரேலைத் தற்சார்பு கொண்ட நாடாக மாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் மத்திய கிழக்கில் நிலவும் இந்தப் போர் மேகம், முஜ்தபா காமேனியின் வருகை அல்லது வீழ்ச்சியைப் பொறுத்தே அடுத்தகட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.