லண்டன் வரை பாயும் ஏவுகணைகள்? ; ஈரான் குறித்து இஸ்ரேல் தகவல்
ஈரானிடம் தற்போது லண்டன், பாரிஸ் அல்லது பெர்லின் வரை பாயக்கூடிய ஏவுகணைகள் இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளன.
ஈரானின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 2,350 மைல் தொலைவில் உள்ள டியேகோ கார்சியா (Diego Garcia) அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தோல்வியடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்தே இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.
லண்டனை அடைய ஒரு ஈரானிய ஏவுகணை சுமார் 2,700 மைல்கள் பயணிக்க வேண்டும். ஈரானியர்கள் பிரித்தானியாவை இலக்கு வைப்பதாகவோ அல்லது அவர்கள் நினைத்தாலும் அதைச் செய்ய முடியும் என்றோ எந்தவொரு குறிப்பிட்ட மதிப்பீடும் தற்போது இல்லை என பிரித்தானிய வீடமைப்புச் செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed) தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி சித்தார்த் கௌஷல் (Sidharth Kaushal) பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
அதில், “ஏவுகணையின் வரம்பு என்பது நெகிழ்வானது. ஏவுகணையில் குறைந்த எடையுள்ள வெடிமருந்துகளைப் (Warhead) பயன்படுத்துவதன் மூலம் அதன் பாயும் தூரத்தை அதிகரிக்க முடியும்.
ஈரான் அத்தகைய ஏவுகணைகளை வைத்திருப்பது "அநேகமாக துல்லியமானது" என்றாலும், அவை பிரித்தானியாவுக்கு ஒரு உடனடி அச்சுறுத்தல் அல்ல. ஏனெனில் நீண்ட தூரப் பயணத்தின் போது இந்த ஆயுதங்கள் இலக்கை துல்லியமாகத் தாக்கும் தன்மையை இழக்கின்றன.
இந்த ஏவுகணைகள் ஐரோப்பாவை அடைய வேண்டுமானால், மிகவும் பலமான வான் பாதுகாப்பு கட்டமைப்புகளைக் கொண்ட வான்பரப்புகளைக் கடக்க வேண்டும்.
குறைந்த எண்ணிக்கையிலான, துல்லியமற்ற பாலிஸ்டிக் ஏவுகணைகளை இவ்வளவு நீண்ட தூரத்திற்கு ஏவுவதன் மூலம் ஈரான் எதனை சாதிக்கப் போகிறது என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது என சித்தார்த் கௌஷல் சுட்டிக்காட்டியுள்ளார்.