காணாமல் போன யுவதி கண்டுபிடிப்பு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா பிளான்டேசன் தோட்டத்திலிருந்து கடந்த (05) ஞாயிற்றுக்கிழமை தனது தாயுடன் கிக்கியாமலை காட்டுக்கு விறகு சேகரிக்கச் சென்ற நிலையில், காணாமல் போயிருந்து யுவதி, நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
யுவதி காணாமற் போனமை தொடர்பில், அவரது பெற்றோர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸாரும், இராணுவத்தினரும், பிரதேசவாசிகளும் இணைந்து கடந்த நான்கு நாள்களாக தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் குறித்த யுவதி நுவரெலியா சாந்திபுர பகுதியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
கிக்கிலியாமலை காட்டில் இருந்து, வழிதடுமாறி சாந்திபுர காட்டுக்கு சென்றுள்ள யுவதி, காட்டுக்கு வெளியே வந்து சத்தமிட்டுள்ளார். இதனை அவதானித்த பிரதேசவாசி ஒருவர், நுவரெலியா பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து, விரைந்த பொலிசார், யுவதியை மீட்டு அவரை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து வைத்திய பரிசோதனை செய்த பின்,பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.