தமிழர் பகுதியில் தொலைபேசி ஊடாக நீண்டகாலம் அரங்கேறிய தகாத செயல் ; காட்டிக் கொடுத்த இரகசியத் தகவல்
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி, ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணை
சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியிலிருந்து சாய்ந்தமருது பகுதி நோக்கி வன் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தப்பட்டபோது குறித்த 35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசி ஊடாக மின்னல் வேகத்தில் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் இந்த சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று (18) சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.