தமிழக முதலமைச்சர் விஜயிடம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அழிவுகரமான 'அடிமட்ட இழுவைப் படகு' (Bottom Trawling) மீன்பிடி முறையைத் தமிழ்நாட்டிலும் தடை செய்யுமாறு, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இலங்கையில் 2017 ஆம் ஆண்டு முதல் அடிமட்ட இழுவைப் படகு மீன்பிடி முறை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இம்முறை கடல் வளங்களுக்கும், பவளப்பாறைகளுக்கும் பாரிய அழிவை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் இத்தடையை அமுல்படுத்த வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.
பாக்கு நீரிணையில் நீண்டகாலமாகத் தொடரும் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர வழிகள் ஊடாகத் தீர்வு காணத் தாம் விரும்புவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தாம் விரைவில் தமிழ்நாடு செல்ல விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை மற்றும் இந்தியத் தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைந்து, இருதரப்புக்கும் சாதகமான தீர்வை எட்ட முடியும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டார்.