வெளிநாட்டு பல்கலையில் பட்டம் பெற மில்லியன் அரச நிதி ; பட்டியலிட்டு அம்பலபடுத்திய அமைச்சர்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கலாநிதிப்பட்டம் அல்லது பிற உயர் கல்வியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 195,7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் அருன கருணாதிலக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (5) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் சவீந்திர பண்டார கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
உறவினர்களுக்காக அரச பணம்
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கலாநிதிப்பட்டம் அல்லது பிற உயர் கல்வியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 195,7 மில்லியன் (195 747 480.61) ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதி வழங்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை சபைப்படுத்துவதுடன் ஒருசிலரின் பெயர் விபரங்களை மாத்திரம் தெரிந்துகொள்வதற்காக தெரிவிக்கிறேன்.
அந்த வகையில், 2005ஆம் ஆண்டு கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணா அவரின் பிள்ளையான ஹர்ஷண சபுன் ராஜகருணாவுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசிலாக 5இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
2006இல் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடிதுவக்கு அவரின் பிள்ளை அல்லது உறவினரான ஐ.என். கொடிதுவக்குவுக்கு ஒரு மில்லியன் இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது.
அதே ஆண்டில் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பி இராதாகிருஷ்ணன் அவரின் அவரின் பிள்ளை அல்லது உறவினர் திருமதி கே, இராதாகிருஷ்ணனுக்கு 8இலட்சத்தி 3ஆயிரத்தி 6ரூபா, 3இலட்சத்தி 96ஆயிரத்தி 994 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் மீண்டும் நாடு திரும்பியோர், திரும்பாதோர் தொடர்பான தகவல்கள் இல்லை. என்றாலும் இதுதொடர்பாக எதிர்காலத்தில் தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமாக இருந்தால், அதுதொடர்பில் செயற்படுவோம் என்றார்.