வலிவடக்கில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை; ஜனாதிபதி வாக்குறுதி காற்றில் பறந்ததா?
இராணவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என யாழ் வந்த ஜனாதிபதி அனுரகுமார கூறிய நிலையில் , யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரேதச சபைக்கு உட்பட்ட பலாலி வீதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலைக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
வசாவிளான் மானம்பரை பிள்ளையார் ஆலயத்தை உள்ளடக்கிய சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குறித்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
35 வருடங்களாக வாழ்விடங்களை இழந்த மக்கள்
குறித்த இராணுவ வைத்தியசாலை ஐந்து தனியாருடைய காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அக்காணிகளில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந் நிலையில் அதற்கு அருகாமையில் விடுமுறைக்கு செல்லும் இராணுவத்தினரின் ஒன்று கூடும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சுமார் 35 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த காணிகளை இழந்து வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள் தமது சொந்த நிலம் வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தமது காணிகளை விடுவித்து தருமாறு பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் வரை தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த பகுதியிலுள்ள தனியார் கணியில் இராணுவ வைத்திய சாலையின் கட்டுமானங்கள் இடம் பெற்று வருகிறது.
அதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இராணுவத்திடம் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனியார் காணியில் இராணுவத்தினருக்கு வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருகிறமை ஜனாதிபதியின் வாக்குறுதி தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.