வலி. வடக்கில் இராணுவத்தினர் காணிகளை சுவீகரிக்கவில்லையாம்
வடக்கி கிழக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி கூறிவருகின்றார்.
இந்த நிலையில் , இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை கையகப்படுத்த வில்லை எனவும் , மக்களின் நலனுக்காவே காணிகளை கையகப்படுத்தி வருவதாக என வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேகா சபையில் தெரிவித்துள்ளார்.
மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது
கீரிமலை பகுதியில் கடற்படையினர் ரேடார் அமைக்க தனியாருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , அதற்காக காணியை வழங்க முடியாது என வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் (16) நடைபெற்ற மாதாந்த அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தான் ரேடார் அமைக்கப்படுவதாக கூறினார்.
அதற்கு தவிசாளர் , கீரிமலைக்கு தான் போதைப்பொருள் வருகிறதா என கேள்வி எழுப்பினார் ?
அத்துடன் கீரிமலை பகுதியில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கடற்படையினர் தமது கண்காணிப்பு நிலையம் ஒன்றினை அமைக்க தனியார் காணியில் இரண்டு பரப்பினை கையகப்படுத்த முயற்சித்த வேளை மக்களின் எதிர்ப்பை அடுத்து , அந்த காணிகளை மக்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிகளையும் மீள கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் , நகர அபிவிருத்தி அதிகார சபை அதனை இன்னமும் பொறுப்பெடுக்காத நிலையிலையே அது இப்பவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதனை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் பொறுப்பெடுத்தால் , ஜனாதிபதி மாளிகையும் அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படும். என தெரிவித்தார்.
அதற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் , அது இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்படவில்லை , மக்களின் நலனுக்காகவே மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது. இதே போன்று தான் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் காணி சுவீகரிக்கப்படுகிறது என கூறினார்.
அதற்கு தவிசாளர் , விமான நிலையத்திற்கு தேவையான காணிகளை சுவீகரிக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு மேலதிகமான காணிகளை சுவீகரிக்கவே எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் . வல்லை - அராலி வீதி கூட விமான நிலையத்தை காரணம் காட்டி மூடி வைத்துள்ளார்கள்.
ஆனால் அந்த வீதிக்கு விமான நிலையத்த்திற்கும் இடையில் எவ்வளவோ இடைவெளிகள் உள்ளன. அந்த பகுதிகள் இன்று வெறும் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன.
இவை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக சுவீகரிக்கப்படும் மக்கள் காணிகள். அவற்றினை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என கூறியதுடன் , விமான நிலையத்திற்கு எவ்வளவு காணி தேவை ? அதன் ஓடுபாதையின் நீளம் எவ்வளவு ? எவ்வளவு காணியை சுவீகரித்து வைத்துள்ளார்கள் ? என தவிசாளர் உறுப்பினரிடம் கேட்ட போது, அது பற்றி தெரியாது. ஆனால் மக்களின் நலனுக்காகவே காணிகள் சுவீகரிக்கப்படுகிறது.
இராணுவத்தின் தேவைக்காக இல்லை என மீண்டும் பதில் அளித்தார். அத்துடன் சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு எமது அரசாங்கம் நஷ்ட ஈடுகளை வழங்கும் எனவும் உறுப்பினர் கூறினார்.
அதற்கு 1980ஆம் ஆண்டு கால பகுதியில் துறைமுக அபிவிருத்திக்கு என சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கே இன்னமும் நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது காணிகளை சுவீகரித்து நஷ்ட ஈடு வழங்குவோம் என்ற கதைகளை நாங்கள் நம்ப தயார் இல்லை. எனவே மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என திடமாக தவிசாளர் கூறினார்.