தென் பகுதியில் முதன் முறையாக அரிய வகை புலம்பெயர் பறவை
ஹிக்கடுவ கடற்கரையில் சுகயீனம் அடைந்த நிலையில் காணப்பட்ட அரிய வகை புலம்பெயர்ந்த பறவையொன்று வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அத்திடிய பறவைகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
Shearwater
இதன்போது, மீட்கப்பட்ட பறவை Shearwater என அழைக்கப்படும் கிழக்கு ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு மேற்கே உள்ள வெப்பமண்டலப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது என ஹிக்கடுவ வனவிலங்கு பூங்காவின் காப்பாளர் அசங்க குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வெப்பமண்டலப் பறவையானது மனித வாழ்விடங்களிலிருந்து விலகி, பாறைப் பிளவுகள் அல்லது மணல் மேடு குழிகளில் முட்டையிடும் எனவும் குஞ்சு பொரித்த பிறகு, குஞ்சுகள் பறக்கும் வரை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், Shearwater பறவையானது நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை என்பதுடன் கடலில் மிதக்கும் பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படும் என்றும் குணவர்தன கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹிக்கடுவ கடற்கரையில் மீட்கப்பட்ட Shearwater, அத்தகைய குப்பைகளை உட்கொண்டுள்ளதன் காரணமாகவே சுகயீனம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெற்கு பிராந்தியத்தில் Shearwater இனப்பறவையை காண்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.