சுற்றிவளைப்பின் போது கைதான இடைத்தரகர் ; விசாரணையில் வெளியான தகவல்
மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவு சான்றிதழை மாற்றுவதற்காக 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (28) முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன திணைக்களத்துக்கு அருகில் இலஞ்சத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் தற்காலிக பதிவு சான்றிதழை ஆரம்ப பதிவு சான்றிதழாக மாற்றிக்கொள்வதற்கு மோட்டார் வாகன திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் எனத்தெரிவித்து குறித்த சந்தேக நபர் 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாவை முற்பணமாக பெற்றுக்கொள்வதற்கு முற்பட்ட போதே சந்தேக நபர் மோட்டார் வாகன திணைக்களத்துக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் அறையில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (28) முற்பகல் 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.