எம்.எச்.எம்.ஹரீஸ் - ஹென்றி இரகசிய ஒப்பந்தம்?
கல்முனை மாநகர சபையின் 4வது பாதீடு எதிர்வரும் 8ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பான பல்வேறுபட்ட கேள்விகள் வாக்களித்த தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தவண்ணமுள்ளன.
நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்த கதையையொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவளிக்கின்ற நிலைப்பாடு தொடர்வது தொடர்பில், மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கல்முனையில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக தங்களது பூர்வீக பிரதேசங்களை நிர்வாகம் செய்யும் பிரதேச செயலக நிர்வாக அலகொன்றை நிறுவுவதற்காக போராடும் சமூகத்தின் நியாயமான அபிலாசைக்கு அரசியல் ரீதியில் முட்டுக்கட்டையாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸை த.தே.கூ ஆதரிப்பதை கல்முனைத் தமிழர்கள் ஒருபோதும் இனி ஏற்கப்போவதில்லை.
“ஆடு பகை குட்டி உறவு” என்பதுபோல் கல்முனை மாநகர சபையில் த.தே.கூ ஆதரவைப்பெறும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.ஹரீஸ் மூலம் கல்முனையில் தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகம் ஒன்று அமைவதை தடுக்கும்வகையில் கல்முனை முஸ்லிம்கள் பிரதேசமென நிறுவிவருகிறது.
உண்மையில் கல்முனையின் பூர்வீகக் குடிகள் யார், கல்முனையில் இரு பிரதேச செயலகங்கள் இயங்குவதற்கு ஏற்புடைய காரணிகள் தொடர்பாக ஏலவே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், எமது தலையில் நாமே மண்ணை வாருகின்ற த.தே.கூ செயற்பாடுகள் இந்த பாதீடு தொடர்பில் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதே பொருத்தமானதாகும்.
த.தே.கூ வின் இரண்டு பிரிவினர்
இறுதியாக கடந்த வருட பாதீட்டில் தோல்வியடையும் இறுதி சந்தர்ப்பத்தில் “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு சந்தோசம்” என்பதுபோல் மாநகர சபையில் இரண்டு துருவங்களாக இயங்கிய த.தே.கூ இன் ஒரு பிரிவினரை தன்வசப்படுத்தி வெற்றி கண்டது முஸ்லிம் காங்கிரஸ்.
இந்நிலை இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளதென்றே குறிப்பிடவேண்டும். மாநகர சபையில் த.தே.கூ அணியினருக்கு தலமைதாங்கும் ஹென்றி மகேந்திரன் அணியினர் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாகவும், உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் (ராஜன்), கந்தசாமி சிவலிங்கம் ஆகியோர் எதிராகவும் செயற்பட்டு வருகின்றார்.
ஹரீஸ் – ஹென்றி இரகசிய ஒப்பந்தம்?
தேர்தல் கால பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக தங்களை தாங்களே விரோதிகளாக சித்தரித்துகொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுவருகின்றபோதும் அதன் பிற்பாடு ஹரீஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் மு.கா வை தொடர்ச்சியாக மாநகர சபையில் ஹென்றி தரப்பு ஆதரிப்பது எதற்காக என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
அதுமட்டுமன்றி மு.கா வை தாங்கள் ஆதரிக்க வேண்டியேற்படுவது ஹென்றியின் அழுத்தத்தின் காரணமாகவே எனவும் பல உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறெனின் தேர்தல் காலத்தில் மட்டும் நாடகத்தை அரங்கேற்றும் இந்தக் கூத்தாடிகள் எமக்கான பிரதிநிதிகளா என்ற கேள்விகளும் எம்முன்னே எழுகின்றது.
தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான முடிவுகளை வட்டார மக்களின் விருப்பின்படி நிறைவேற்றுவதாக தெரிவிக்கும் இவர்கள் திரைமறைவில் எமது மக்களின் இருப்புகளையே கேள்விக்குள்ளாக்கும் வகையான தீர்மானங்களை தன்னிச்சையாக மேற்கொள்வது மக்களிடையே த.தே.கூ விற்கு பாரிய சரிவை ஏற்படுத்துவதில் முக்கிய காரணி என்பதை மறுப்பதற்கில்லை.
வடக்கு பிரதேச செயலகம்; ஏனைய கட்சிகளின் நிலைப்பாடு?
மாநகர சபையில் அங்கம்பெறும் சுயாதீன அமைப்பான தோடம்பழம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி, ஏனைய தமிழ் பிரதிகள் வடக்கு பிரதேசம் தொடர்பில் சாதகமான சமிக்ஞைகளை சபையில் வெளிப்படுத்துகையில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கையை எட்டமுடியாத த.தே.கூ வின் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு செயற்பாடானது எதிர்காலத்தில் கல்முனையில் அவர்களது அரசியல் செயற்பாடுகளை முற்றாக ஸ்த்தம்பிக்கச் செய்யுமென த.தே.கூ ஆதரவாளர்கள் அஞ்சவேண்டியேற்பட்டுள்து.
திட்டமிட்டு த.தே.கூ வை கல்முனைக்குள்ளே சிதைக்கும் வண்ணம் கட்சிக்குள்ளிருக்கும் பிரதானிகள் செயற்படுவதும், கட்சியின் தலமையின் அம்பாரை தமிழர்களை கைகழுவிவிடும் செயற்பாடுகளை தொடர்வதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதற்கான பதிலடியாக அம்பாரையில் கடந்த பொதுத்தேர்தலில் த.தே.கூ படுதோல்வியடைந்து தனது பிரதிநிதித்துவத்தை இழக்கநேரிட்டதை இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.
கப்பலேறிய கணேஷும் வடக்கில் தெரிவாளரும்!
கடந்த பொதுத்தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட வேட்பாளர் தெரிவாளரின் சகோதரர் ஒருவர் மாற்று கட்சியொன்றில் வேட்பாளராக பெயரிடப்பட்டிருந்த நிலையில் தெரிவாளர் வன்னியில் தஞ்சமடைந்திருந்தார். தேர்தலில் அம்பாரையில் சற்றும் தங்களை ஈடுபடுத்தாத கல்முனையின் காவலர்கள் தேசியப்பட்டலில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பெயரிடப்படுவது நகைப்புக்குரியதானது. இவ்வாறாக த.தே.கூ வீழ்ச்சிக்கு திட்டமிட்டு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயற்படுபவர்கள் தொடர்பில் கல்முனைத் தமிழர்கள் விழிப்படையவேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.
த.தே.கூ வின் நழுவல் போக்கு!
இதேநேரம் கடந்த பாதீடுகளுக்கு வாக்களித்து மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைத்த பின்னர் த.தே.கூ வின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் அறிக்கைகள் வெளியாகும். அதில் அவர் குறிப்பிடுவார் உள்ளூராட்சி மன்றங்களில் முடிவுகளை அப்பிரதேச நலன்களுக்கேற்ப எடுக்கமுடியுமெனவும் விசேடமாக கல்முனை பிரதிநிகளுக்கு தலைமையின் எந்த அழுத்தமும் இல்லையென்றும்.
அவ்வாறெனின் த.தே.கூ வின் தலைமை கல்முனை தமிழர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுமாக இருந்தால் மாநகரசபை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிப்பது மீண்டுமொருமுறை செய்யும் வரலாற்றுத் தவறென்பதை வாக்களிப்புக்கு முன்பதாக பகிரங்கப்படுத்துதல் வேண்டும்.
பாதீட்டை தோல்வியடைய செய்தல் வேண்டும்?
2020ல் த.தே.கூ வின் 5 மேலதிக வாக்குகளினாலேயே 22 – 17 என்கின்ற அடிப்படையில் மு.கா பாதீட்டை நிறைவேற்றியது. மேற்படி விடயங்கள் தொடர்பில் அதன் நியாயங்களை ஆராய்ந்து வாக்களித்த மக்களை ஏமாற்றுகின்ற கண்கட்டு வித்தைகளை கைவிட்டு முஸ்லிம் காங்கிரஸை தோல்வியடையச்செய்து கல்முனை மாநகர சபையின் ஆதிக்கம் தொடர்ச்சியாக மு.கா விடம் தொடர்வதற்கு முற்றிட வேண்டும்.
அதைவிடுத்து தொடர்ந்தும் இரகசிய ஒப்பந்தங்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு துணைபோகும் செயற்பாடுகள் தொடருமாயின் கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கின்ற கைக்கூலிகள் சிலரது நிகழ்ச்சி நிரலின் நோக்கங்கள் நிறைவேறுவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.