கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; நாளை முதல் சேவையில் மெட்ரோ பஸ்கள்
கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன்,மக்களுக்கு மேலும் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான ஒரு முயற்சியாக,மேல் மாகாணத்தில் உள்ள ஏழு வீதிகளில் 104 புதிய பேருந்துகளை நாளை திங்கட்கிழமை (29) முதல் சேவையில் ஈடுபடுத்த மெட்ரோ பஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய பேருந்துகளை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.யு.பி. திலகரத்ன, இந்த ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கொழும்பை மையமாகக் கொண்ட ஏழு வீதிகளில் இந்தப் புதிய பேருந்துகள் இயங்கவுள்ளதுடன், பயணிகள் திட்டமிடப்பட்ட வீதிகள் மற்றும் நேர அட்டவணைகளின்படி தங்களது இலக்குகளைச் சென்றடைவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இச்சேவைகள் அமைந்துள்ளன.
குறிப்பாக ஒரேயொரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் கொழும்புக்குள் நுழைவதைக் குறைப்பதே இந்தப் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.கொழும்புக்கு வரும் வாகனப் போக்குவரத்தைக் குறைப்பதே எங்களது முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.
தற்போது பலர் தங்களது அலுவலகங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனியார் வாகனங்களையே பயன்படுத்துவதாகவும், அவற்றில் பெரும்பாலும் ஒரு நபர் மட்டுமே பயணிப்பதாகவும்,இதனால் தினசரி பயணங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்களது நம்பிக்கையாகும்.
பொதுமக்கள் தங்களது தினசரி பயணங்களுக்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, கொழும்பில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண உதவும் என்றார்.