முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த விசமிகள்; வீட்டு சுவரில் ஒட்டப்பட்டிருந்த எச்சரிக்கை கடிதம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீராவோடை எம்.பி.சீ.எஸ் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கே இவ்வாறு இனந்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வீட்டு சுவரில் கொலை அச்சுறுத்தலுடன் எச்சரிக்கை கடிதம் ஒன்றும் ஒட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். விசமிகளின் இந்த நாசகார செயலினால் முச்சக்கர வண்டி எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் வீட்டின் கதவு, ஜன்னல் மற்றும் கூரை போன்றவையும் தீயில் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 3.30 மணியளவில் தான் உறங்கிக்கொண்டிருந்தபோது வெடிப்புச் சத்தம் கேட்டது, உடனே கதவை திறந்து பார்த்த போது முச்சக்கர வண்டி தீப்பற்றிக் கொண்டிருந்ததாக வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்த போதும் முச்சக்கர வண்டி தீயில் எரிந்து சாம்பலாகியது என்று முச்சக்கர வண்டியின் உரிமையாளர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

