மேல் மாகாண கொரோனா தொற்றாளர்களுக்கான விசேட வசதிகள்
மேல் மாகாண கொரோனா தொற்றாளர்களுக்கான விசேட வசதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களை தொற்று நிலைமைக்கு அமைய சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லல் அல்லது வீடுகளிலேயே சிகிச்சையளித்தல் என்பவற்றை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் மேல் மாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் தொலைபேசி குறுஞ்செய்தி சேவை (எஸ்.எம்.எஸ்.) ஊடாக தமது நோய் நிலைமை குறித்து அறிவிக்க முடியும். அதற்கமைய அவர்களுக்கான சிகிச்சைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் ‘1904’ என்ற இலக்கத்துக்கு தமது நோய் நிலைமைகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பும்போது , சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்ற தொற்றாளர்கள் ‘A’ என்றும் , சலி அல்லது காய்ச்சல் காணப்படுபவர்கள் ‘B’ என்றும் எவ்வித அறிகுறியும் அற்றவர்கள் ‘C’ என்றும் குறிப்பிட்டு இடைவெளி ‘வயது’ , இடைவெளி ‘தேசிய அடையாள அட்டை இலக்கம்’ இடைவெளி ‘முகவரி’ ஆகியவற்றை 1904 என்ற இலக்கத்துக்கு அனுப்ப வேண்டும்.
(உதாரணமாக ஒரு குறுஞ்செய்தி இவ்வாறு அமைய வேண்டும் : A வயது தே.அ.அ.இ. முகவரி) இவ்வாறு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளிலுள்ள தகவல்கள் கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் ஊடாக உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன் கிடைக்கப்பெற்ற குறுஞ்செய்திகள் நோய் நிலைமைக்கு அமைய வேறுபடுத்தப்பட்டு 247 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நோயாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் அம்பியூலன்ஸ் சேவை ஊடாக சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படும் தொற்றாளர்களுடன் 1390 என்ற இலக்கத்தின் ஊடாக வைத்திய குழுவினர் தொடர்பு கொள்வர்.