மட்டக்களப்பில் அடிதடியில் இறங்கிய மாநகர ஆணையாளர் ஊழியர் ; இருவருக்கும் நேர்ந்த கதி!
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ஊழியர் இடையே இடம்பெற்ற மோதலில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாநகரசபைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிள்ளையான் தரப்பு அதிகார மோதல், மாநகர முதல்வர் – ஆணையாளர் வடிவத்தில்இடம்பெற்று வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பதால், மாநகரசபை சிக்கலான நிலைமையை எட்டியுள்ள நிலையில், அண்மையில் புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டு, மீண்டும் அது இரத்தாகிய சம்பவமும் அரங்கேறியிருந்தது. இந்த நிலையில், நேற்று, ஆணையாளரின் அலுவலகத்திற்கு அந்த ஊழியர் சென்ற பின்னர் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.
இதன்போது, தற்காலிக ஊழியர் ஒருவர் , ஆணையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தில் ஆணையாளரே முதலில் தாக்குதல் நடத்தியதாகவும், தாம் பதில் தாக்குதலே நடத்தியதாகவும் தற்காலிக ஊழியர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் நெருக்கமான அந்த ஊழியர் பணம் வாங்கிக் கொண்டு வேலைகள் செய்து கொடுப்பதாக, முதல்வரிடம் ஆணையாளர் குற்றம்சுமத்தியதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் முதல்வர் இது தொடர்பில் வினவியபோது, அதை மறுத்து, தன்னை பற்றிய அவதூறு பரப்புவதாக குறிப்பிட்டே ஆணையாளரின் அலுவலகத்திற்கு சென்றதாகவும் முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் ஊடகப்பணிகளை மேற்கொண்ட தற்காலிக ஊழியரான தாக்குதலில் ஈடுபட்டவரை, பொறியியல் பிரிவிற்கு ஆணையாளர் மாற்றியதால் ஆத்திரமடைந்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆணையாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஊழியரை பொலிசாரால் கைது செய்த நிலையில் அவர், தானும் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.