யாழ். வைத்தியசாலையில் கலாட்டாவில் ஈடுபட்டு பெண் ; பொலிசார் மீது மருத்துவ வட்டாரங்கள் அதிருப்தி
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குள் கலாட்டாவில் ஈடுபட்டு, மருத்துவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபருக்கு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எழுத்துமூலம் முறையிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குள் பெண்ணொருவர் ரகளையில் ஈடுபட்டார்.
15 நாட்கள் கடந்தும் அவர் மீது பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென மருத்துவ வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டன. புத்தளத்தை சேர்ந்த பணக்கார வர்த்தகர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெரிய ஹொட்டல் ஒன்று கட்டி வருகிறார்.
அவரது தாயார் யாழ்ப்பாணம் வந்த சமயத்தில் திடீர் நோய்வாயப்பட்டு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
முதற்கட்ட சிகிச்சைகளன் பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை தேறிவருவதையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, மருத்துவ விடுதிக்கு மாற்றினர்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மிகச்சில அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களே இருந்ததால், நிலைமையை நிர்வகிக்க மருத்துவர்கள் மேற்படி முடிவெடுத்திருந்தனர். எனினும், அந்த பெண்ணின் துணையாக நின்ற பெண்ணொருவர், மருத்துவமனைக்குள் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அவரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றக்கூடாதென்றும், அப்படி மாற்றினால் திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தாம் செல்லப் போவதாகவும் மிரட்டினார்.
நோயாளியான பெண்ணின் மருத்துவ நிலைமையை புரிய வைக்க முயன்ற மருத்துவர், அவர் உடல்நலம் தேறுவதையும், தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற தேவையில்லையென்றும் புரிய வைக்க முயன்றார்.
அந்த பெண் அட்டகாசத்தில் ஈடுபட்டு, மருத்துவர்களின் கடமைக்கும் இடையூறு விளைவித்தார். இதுதொடர்பில் தெல்லிப்பளை பொலிசாரிடம் மருத்துவமனை நிர்வாகம் முறைப்பாடளித்தது.
நோயாளியான பெண்ணை அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று. பெருந்தொகை பணத்தை செலவிட்டு, அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைத்திருந்துள்ளனர்.
எனினும், மருத்துவமனை நிர்வாகத்தின் முறைப்பாடு தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென மருத்துவ வட்டாரங்கள் விசனம் தெரிவித்தனர். அண்மையில் அனுராதபுரம் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
இதை தொடர்ந்து, மருத்துவமனைக்குள் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற சிந்தனை தீவிரம் பெற்றது.
ஆனால் தெல்லிப்பளை மருத்துவமனைக்குள் நடந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென மருத்துவர்கள் அதிருப்தியடைந்ததையடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.