நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் எற்பட்ட இயந்திர கோளாறு!
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆம் அலகு மின் உற்பத்தி இயந்திரம் இன்று (17-11-2023) இரவு முதல் இயங்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
செயலிழந்த மின் உற்பத்தி அலகுகளை மீளமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அனல்மின் நிலைய ஊழியர்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயலிழந்த நிலையில் இருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகு, திட்டமிடப்பட்ட பாரிய சீரமைப்புப் பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்து தற்போது சோதனை ஓட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன்மூலம், இந்த மின் உற்பத்தி அலகு கூடிய விரைவில் தேசிய கட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் மின்சார உற்பத்தி தடைபடாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.