உக்ரைனில் தவிக்கும் தமிழ் மாணவி மவுனிசுகிதா தந்தைக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான தகவல்
உக்ரைனில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாணவி தங்களை மீட்க வேண்டும் என வாட்ஸ் அப் மூலம் பேசி, பெற்றோருக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த நாகராஜ் - குணவதி தம்பதியரின் மகள் மவுனிசுகிதா (20). உக்ரைனில் உள்ள லையு நேசனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தங்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் தற்போது அங்குள்ள நிலை குறித்தும் மாணவி மவுனிசுகிதா, வாட்ஸ் அப் மூலம் பேசி, பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
அதில், “உக்ரைனில் 15 ஆயிரம் மாணவர்கள்இருக்கிறோம். அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு போதுமான விமானங்களை அனுப்பவில்லை,” என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் இருக்கும் நிலவரம் குறித்து தகவல் அனுப்பிய ஈரோடு மாணவி மவுனிசுகிதா, ”நாங்கள் இப்போது உக்ரைனின் லீவ் (lviv) பகுதியில் உள்ளோம்.
இங்கு 50 தமிழர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களும் இருக்கிறோம். இங்கு ராணுவத்தினர் யாரும் இதுவரை வரவில்லை. ஏ.டி.எம் களில் காலையில் நீண்ட வரிசை இருந்தது. மாலையில் அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டுவிட்டன.
உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒரு வாரத்திற்கு சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்
மாணவி மவுனிசுகிதாவின் தந்தை நாகராஜ் கூறும்போது, “போர் நடக்கும் இடத்தில் தவிக்கும் எங்கள் மகளின் பதிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
எங்கள் மகளையும் அங்குள்ள இந்தியர்களையும் மீட்டுத் தர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.