கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்!
கொழும்பில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகிய மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கூட்டுப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று நண்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாகச் சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மனு ஒன்றைக் கையளிக்கவுள்ளதாக துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான 13 ஏக்கர் நிலத்தை சீன நிறுவனமான CICTக்கு விற்பனை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கை எனவும் கூறப்படுகின்றது.
அதோடு விற்பனை செய்யப்பட்ட அனைத்து அரச சொத்துக்களையும் மீளப் பெற்றுக் கொள்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது மேலும் அரச சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் இன்று நண்பகல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபடவுள்ளதாகவும் கூட்டமைப்பின் இணை அழைப்பாளரான ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.