ஐரோப்பிய நாடொன்றில் பயங்கரம்; மிகப்பெரிய வெடிப்பு சம்பவம்
இந்தாலியின் தலைநகர் ரோம் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லொறியொன்று எரிபொருள் குழாய் மீது மோதியதில் வெடிப்பு
லொறியொன்று எரிபொருள் குழாய் மீது மோதியதில் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அதன் பின்னர் குறித்த இடத்தில் தீ பரவிய நிலையில், மற்றுமொரு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்புச் சம்பவம் அடர்த்தியான கரும் புகையையுடன் கூடிய ஒரு பெரிய தீப்பிழம்பை ஏற்படுத்தியதாகவும் நகரம் முழுவதும் வெப்புச் சத்தம் உணரப்பட்டதாகவும் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ரோம் நகர மேயர் ரொபர்டோ குவால்டியேரி, பெற்றோல் நிரப்பு நிலையம் மற்றும் அதற்கு அருகில் பாதிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதில் பொதுமக்கள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.