இலங்கையில் நடந்த பாரிய தாக்குதல்கள்: சஹ்ரான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தரும் ஆதாரம்!
இலங்கையில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி, ஆகஸ்ட் மற்றும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என இடம்பெற்ற அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது
நாட்டில் 2018ஆம் ஆண்டு 02 மாதம் 06 ஆம் திகதி பள்ளிவீதி புதிய காத்தான்குடி என்ற விலாசத்தை சேர்ந்த அப்துல் மொஹமட் பர்ஹான் என்ற நபரின் வீட்டின் மீதும் மற்றும் 2018-02-12 ஆம் திகதி சி.பி காசிம் வீதி, காத்தான்குடி 01 பகுதியில் அமைந்திருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சிக் காரியாலயம் மீதும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றில் சமர்ப்பணங்கள் அறிக்கையிடப்பட்டிருந்தது.
மேலும், குறித்த சம்பவங்கள் தொடர்பில் மட்டு.குற்றவியல் விசாரணை அதிகாரிகளினால் சம்பவ இடங்களில் இருந்து வெடிகுண்டுப் பாகங்கள் உள்ளிட்ட வழக்கு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேவேளை, 2018.12.04 திகதியன்று அரச இரசாயன பகுப்பாய்வாளரால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் குறித்த வழக்குப் பொருட்கள் நேர வெடிகுண்டுகளின் பாகங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்களின் வழக்குப் பொருட்களுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் வழக்குப் பொருட்கள் தொடர்புபட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இது தெரியவந்துள்ளது.
இதேபோல் இந்தியாவில் கைது செய்யப்பட்ட எஸ்.சம்சுதீன் என்ற இந்திய பிரஜையின் கைப்பேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட முஜஹிதீன் போ அல்லா என்ற வட்ஸ் எப் கணக்குடன் தொடர்புபட்டுள்ள இலங்கையை சேர்ந்த 702 தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் (TID) விரிவான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரித்ததில் மேற்குறிப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளை சஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்தியது தெரியவந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பில் 2021.12.02 ஆம் திகதி மட்டு.நீதிவான் நீதிமன்றில் மேலதிக அறிக்கையின் ஊடாக சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றது.
மேலும், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குப் பொருட்கள் ஒப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.