சுகாதார முறையினை மீறி இடம்பெற்ற திருமணம்; தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
பொகவந்தலாவ ஆரியபுர கிரீன்லைன் மண்டபத்தில் சுகாதார முறையினை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்று சுகாதார அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா மற்றும் டெல்டா தொற்று காரணமாக திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இந் நிலையில் சுகாதார முறையினை மீறி பொகவந்தலாவ ஆரியபுர பகுதியில் திருமண நிகழ்வு மேற்கொள்ளபட்டதாகவும், நிகழ்விற்கு 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழஙக்பட்ட தகவலுக்கமைய குறித்த திருமண மண்டபத்திற்கு விரைந்த பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் திருமண மண்டபத்தில் இருந்த ஏனைய மக்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அதோடு திருமண நிகழ்வில் மணமகள் மற்றும் மணமகன் பெற்றோர்கள் ஆகியோர் மாத்திரம் கலந்து கொள்ள முடியுமென பொது சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் எச்சரித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்களும் பொகவந்தலாவ பொலிஸாரும் மேற்கொண்டுள்ளதுடன், மண்டப உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
