இலங்கை அரசியலில் பல அதிரடி திருப்பங்கள்! இராஜதந்திர நகர்வுகளில் ரணில் !
இலங்கை அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலையில் அது குறித்து மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவிக்கையில்,
அரசியல் யாப்பில் ஜனாதிபதி விலகல் தொடர்பான பிரிவுகளில் ஒன்று 37 ஆவது சரம். மற்றையது 40 சி பிரிவு- இதில் 37 சரத்தின் பிரகாரம், நாட்டில் ஏற்பட்டுள்ள இடர்கால நிலைமை அல்லது வேறு ஏதேனும் காரணங்களின் அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுப் பதவி விலகலாம்.
40 சி சரத்தின் கீழ் பதவி விலகினால், பிரதமர் அல்லது சபாநாயகர் அல்லது நாடாளுமன்றத்தில் செல்வாக்குள்ள உறுப்பினர் ஒருவர் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டும். 40 சி சரத்தின் கீழ் கோட்டா பதவி விலகுவார் என்றே எதிர்க்கட்சிகள் கனவு கண்டிருக்க வேண்டும். ஆனால் கோட்டாபய 37 சரத்தின்படியே பதவி விலகியிருக்கிறார்போல் தெரிகிறது.
இருந்தாலும் கோட்டாபய எந்தச் சரத்தின் கீழ் பதவி விலகினார் என்று இதுவரை சபாநாயகர் அறிவிக்கவில்லை. ஆனால் ரணிலுக்குத் தெரிந்திருக்கலாம். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவும் துணிவோடு செயற்படுகின்றார் எனவும் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றப் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரை, ரணில் பாதுகாப்பு அமைச்சராகவோ அல்லது பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடவோ முடியாது. ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்கவும் இயலாது. ஆனால் இங்கே ரணில் விக்கிரமசிங்க விதிகளுக்கு மாறாக ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தமைக்குக் காரணங்கள் இருக்கலாம்.
அது செல்லுபடியாகாது என்பதற்கு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வாதிட எதிர்க்கட்சிகளுக்குக் கால அவகாசமும் போதாது. பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்கவே ரணில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருக்க வேண்டும்.
இதனால், பின்னர் பல சட்டச் சிக்கல்கலை ரணில் எதிர்கொள்ள நேரிடும். இருந்தாலும் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றல், நாடாளுமன்றம் கூடி அவரை அங்கீகரிப்பதற்கிடையில், சஜித் பிரேமதாச அணியில் இருந்து பலரை மீண்டும் தனது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்வாங்கிவிடுவார் ரணில். அதற்கான இராஜதந்திரம் (நரித்தந்திரம்) அவரிடம் உண்டு.
இங்கே சட்டத்தரணி சுமந்திரன் ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்பதை எதிர்ப்பதற்கான காரணம் தனிப்பட்ட பகைமை என்பதே. ஈழத் தமிழர்களுக்கான நோக்கில் ரணிலைச் சுமந்திரன் எதிர்க்கவில்லை என்பது வெளிப்படை. 2015 இல் மைத்திரி - ரணில் ஆட்சியில் சுமந்திரன் தனிப்பட்ட முறையில் ரணிலோடு இணைந்து தமிழ் மக்களின் சா்வதேச ஆதரவுத் தளத்துக்கு மாறான பல செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் எனவும் அவர் கூறினார்.
இப்போது தனிப்பட்ட முரண்பாடுகளினால், தமிழ் மக்களின் பேரில் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்ப்பது வேடிக்கை அல்லவா? சுமந்திரனின் இத் தந்திரத்துக்குள் சாணக்கியன் ஏன் சிக்கிக் கொண்டார்? எனவும் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.