மைத்திரிபால சிறிசேனவை திடீரென சந்தித்த மனோ!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Sirisena) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பானது மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (26) செவ்வாய்கிழமை இடம் பெற்றுள்ளது.
மெலும் இச்சந்திப்பு தேர்தல் முறைமை தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைபாட்டை அறிவதற்காகவும், அதுபற்றி கலந்துரையாடவுமே மைத்திரிபாலவை சந்தித்ததாக மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோ கணேசன் மேலும் தெரிவித்தது,
தேர்தல் நடக்க போகிறதோ, இல்லையோ, ஆனால் தேர்தல் முறைமையை பூரணமாக மாற்றி விகிதாசார முறைமையை ஒழித்து, கலப்பு முறைமையை கொண்டு வந்து, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, இந்நாட்டில் இரண்டு கட்சி ஆட்சியை நிலைபெற செய்ய அரசாங்கம் கங்கணம் கட்டி செயற்படுகிறது.
இதற்கு உறுதுணையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கலப்பு முறைமையை ஆதரிக்கிறது என தெரிவுக்குழு தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவுக்குழுவில் அறிவித்துள்ளார்.
இது ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் என்னிடம் நேரடியாக அறிவித்திருந்திருந்த நிலைப்பாட்டுக்கு முரணாக உள்ளது என நான் இச்சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே இன்று நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது.
இந்நிலையில் உத்தேச கலப்பு தேர்தல் முறை தமிழ், முஸ்லிம் கட்சிகளை மட்டுமல்ல. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகளையும் அழித்து விடும் என்று மைத்திரிபாலவிடம் நான் எடுத்து கூறினேன். தற்போது தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து ஜேவிபி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் விகிதாசார முறைமையையே ஆதரிக்கின்றன.
கலப்பு முறைமையை எதிர்கின்றன. கலந்துரையாடலின்போது, எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழு தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுவது பிழை. அங்கே எமது கட்சின் நிலைப்பாடு சரிவர கூறப்படவில்லை. விரைவில் நமது கட்சியின் அதிகாரபூர்வ குழு அங்கே வந்து எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கலப்பு முறைமையை ஏற்றுக்கொள்ளாது. நாம் விகிதாசார முறைமையையே ஆதரிக்கிறோம். உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு முறைமை இருக்கலாம். ஆனால், மாகாணசபை, பாராளுமன்றம் ஆகியவருக்கு விகிதாசார முறைமையையே சரியானது. இதுவே எங்கள் நிலைப்பாடு என கூறினார்.