மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம்; வெளிநாட்டில் உள்ளவருக்கு சிவப்பு எச்சரிக்கை
மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய நேற்று(17) தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் (16 மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் ) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது.
வெளிநாட்டில் உள்ளவருக்கு சிவப்பு எச்சரிக்கை
அந்த முரண்பாட்டில் 2022ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் (16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் முதலாவதாக இடம் பெற்ற இருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களாவர்.
சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய, எவ்வாறாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.
சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.