மன்னார் பிரதேச சபையின் அமர்வில் இடம்பெற்ற மயக்கநிலை! யார் தவிசாளர்?
மன்னார் பிரதேச சபையின் அமர்வு இன்று இடம்பெற்ற வேளை அமர்வில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர்களில் சிலர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இன்று செவ்வாய் கிழமை (14.12.2021) காலை மன்னார் பிரதேச சபையின் 43 வது அமர்வு தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தலைமையில் நடைபெற்றது.
இவ் அமர்வில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர்களில் ஒன்பது நபர்கள் வெளிநடப்பு செய்தனர். யார் இப் பிரதேச சபை தவிசாளர் என்ற மயக்கமே காரணமாகும் என தெரிவித்தே இவ் வெளி நடப்பில் ஈடுபட்டனர்.
மேலும் பிரதேச சபை உறுப்பினர்களில் ஒன்பது நபர்கள் வெளிநடப்பு செய்தபோதும் குறித்த அமர்வு தொடர்ந்து நடைபெற்றது.
இலங்கை ஜனநாயக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுக்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் பின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எம்.ஐ.எம்.இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டதும், இதைத் தொடர்ந்து இலங்கை ஜனநாயக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுக்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எஸ்.எச்.எம்.முஜாஹீர் மீண்டும் தவிசாளராக நியமிக்கப்பட்டதாலேயே இம் மயக்கநிலை உருவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த அமர்வில் 21 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்களே கலந்து கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சார்ந்த இரு உறுப்பினர்கள் சுகயீனம் காரணமாக இவ் அமர்வில் கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தலைமையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட சில நேர வேளையில் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் நுழைந்ததும் உறுப்பினர்களின் கருத்துக்கள் தெரிவிக்கும் நேரம் வந்தது.
அச்சமயம் இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில் கேட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சார்ந்த 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினகள் 2 பேரும் மொத்தம் 9 பேர் மன்னார் பிரதேச சபைக்கு யார் தவிசாளர் என்பது எமக்கு மயக்கமாக இருப்பதாகவும் ஆகவே நாங்கள் இவ் அமர்வில் கலந்துகொள்ளவில்லையென வெளிநடப்பு செய்திருந்தனர்.
இவர்கள் வெளிநடப்பு செய்திருந்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் கேட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 7 பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த ஒருவரும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈபிடிபி) ஒருவரும், தமிழர் விடுதலைக் கூட்டனி உறுப்பினர் ஒருவரும் மொத்தம் 10 உறுப்பினர்கள் அமர்வு முடியும்வரை இதில் கலந்து கொண்டனர்.