தமிழர் பகுதியில் தலைமறைவான மூவரை தேடி பொலிஸார் வலைவீச்சு
கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸாரல் நடத்தப்பட்ட சோதனையில், T-56 துப்பாக்கியுடன் முச்சக்கர வண்டியில் சென்றபோது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் தலைமறைவு
சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.
குறித்த சந்தேக நபர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கைக்குண்டுகளை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இருப்பதும் தெரியவந்தது.
அதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய வவுனியா பகுதிக்குச் சென்றிருந்த போது, அதற்குள் சந்தேக நபர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591966 அல்லது 071-8596150 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.