அந்தரத்தில் சிக்கிய 582 பயணிகள் ; பல மணி நேரம் நீடித்த போராட்டம்
இந்தியாவின் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று (19) காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. வீதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
582 பயணிகள்
இந்நிலையில், மைசூர் காலனி ரயில் நிலையம் வந்த மோனோ ரயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ரயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம் மீட்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் சிக்கியிருந்த 582 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்து குறித்து மோனோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், 'வழக்கத்தைவிட ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் ரயிலின் எடை 109 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது
இது ரயிலின் இயல்பான எடை தாங்கும் திறனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 104 மெட்ரிக் டன் அளவைவிட அதிகம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.